இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடகாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா, கரோனா நிலை கையை மீறிச் சென்றுவிட்டதாகக் கூறி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.
இந்தநிலையில், கர்நாடகாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, 14 நாட்கள் முழு ஊரடங்கை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கில், காலை ஆறு மணிமுதல் 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த முழு ஊரடங்கின்போது கட்டுமானம், விவசாயம், உற்பத்தி துறைகள் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு, நாளை இரவு ஒன்பது மணி முதல் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.