கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைப் புரிந்துக் கொண்டுள்ளேன். ஊரடங்கின் படி வீட்டிலேயே இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்தியா மிகத் தைரியமாக கரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் போல நாட்டு மக்கள் அனைவரும் ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார்கள். மற்ற நாடுகளை விட இந்தியா கரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டத்தை முழு நம்பிக்கையுடன் நடத்தி வருகிறது. மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்த்து வருகிறோம். சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம்.
21 நாட்கள் ஊரடங்கு காரணமாகவே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு கரோனா இருந்தது. நடவடிக்கை எடுக்காவிடில் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும் என எண்ணி கூடப் பார்க்க முடியாது. நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது; ஊரடங்கு சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்டது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியா கரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்தியா எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளைப் பிற நாடுகள் பாராட்டியுள்ளன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தனி மனித இடைவெளி முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவைச் சந்தித்தாலும் உயிர் சேதத்தைத் தவிர்த்திருக்கிறோம். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாக உள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதி வரை ஊரடங்கை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும். வரும் ஊரடங்கு காலத்திலும் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அடுத்த வாரம் என்பது கரோனாவைத் தடுக்கும் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும். ஊரடங்கு தொடர்பாக அரசு சார்பில் நாளை (15/04/2020) விரிவான வழிமுறைகள் கொடுக்கப்படும். ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வழிமுறைகள் இருக்கும். விவசாயிகளின் பிரச்னையை கருத்தில் கொண்டு வழிமுறைகள் வெளியிடப்படும். கரோனாவுக்காகத் தற்போதைய சூழலில் நான் அமைத்துள்ள பாதுகாப்பு அரணை அகற்ற முடியாது. வெளியே வரும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் நம் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். தளர்வுக்குப் பிறகு மீண்டும் கரோனா பரவினால் மறுமடியும் ஊரடங்கு கண்டிப்பாக அமல்படுத்தப்படும். 'Aarogya setu' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம்." இவ்வாறு பிரதமர் பேசினார்.