ஒவ்வொரு மாதமும் இறுதி வார ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று (25/04/2021) காலை 11.00 மணிக்கு 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனா முதல் அலையை நாம் வெற்றிகரமாகச் சமாளித்த நிலையில் இரண்டாவது அலை மோசமாகத் தாக்கியுள்ளது. மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து வருகிறோம். குணமடைவோர் விதிகம் அதிகமாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாகம் உள்ளது. கரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், சுகாதாரப்பணியாளர்களும் போராடி வருகின்றனர். கரோனா என்ற சவாலோடு பல்வேறு தரப்பினர் முழு ஈடுபாட்டோடு போர் புரிந்து வருகின்றனர்.
கரோனா தடுப்பூசிக் குறித்த எந்த ஒரு வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்; முழுமையான எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம், இனி வரும் காலங்களிலும் தொடரும் என உறுதியளிக்கிறேன். மருத்துவர், செவிலியர்களோடு, அவசர ஊர்தி ஓட்டுநர்களும் கடவுளைப் போன்று பணிபுரிகின்றனர். மருந்தும் தேவை, எச்சரிக்கையும் தேவை; நாம் ஒன்றாக இணைந்து இந்த சூழலில் இருந்து வெளியேறுவோம். மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் பொதுமக்கள் மருந்துகளைச் சாப்பிட வேண்டாம்". இவ்வாறு பிரதமர் கூறினார்.