லாரி ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் லாரியை ஓட்டி 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், அம்பர்நாத் அருகில் உள்ள பாதல்பூர் பைப்லைன் சாலையில் லாரி ஓட்டுநர் ஒருவர், குடிபோதையில் இருந்து கொண்டு தவறான பாதையில் ஓட்டி வந்துள்ளார். நிலைதடுமாறிய அந்த ஓட்டுநர், எதிரே இருக்கும் கார்கள், மோட்டார்கள், சைக்கிள்கள் என 50க்கு மேற்பட்ட வாகனங்கள் மீது மோதினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ஓட்டுநர் வாகனத்தை முன்னும் பின்னுமாக ஓட்டி, சாலையில் இருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளார். ஓட்டுநரின் செயலால் கோபமடைந்த அங்கிருந்த சிலர், சாலையில் இருந்து கற்களை எடுத்து ஓட்டுநர் மீது வீசினர். இதனையடுத்து, அந்த ஓட்டுநர் அங்கிருந்து லாரியை வேகமாக ஓட்டிச் சென்றார். அங்கு வந்த போலீசாரும், மற்ற வாகன ஓட்டிகளும் அந்த லாரியை பின்தொடர்ந்தனர். இறுதியில், அந்த லாரி ஓட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரியை கவிழ்த்தார். இதனால், அந்த இடமே மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
அதிர்வஷ்டமாக, அங்கு யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து, அந்த லாரி ஓட்டுநரான சாரதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.