அமைச்சரின் சகோதரியை ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறி சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக நிதின் அகர்வால் பொறுப்பு வகித்து வருகிறார். நிதின் அகர்வாலின் சகோதரி ருச்சி கோயலிடம், முன்னாள் உத்தரப் பிரதேச எம்.எல்.ஏவான சுபாஷ் பாசியும், அவரது மனைவி ரீனா பாசியும் பிளாட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.49 லட்சத்தை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றப்பத்திரிகையை சமர்பித்தனர். அதன்படி ஹர்டோய் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. வாரண்டின் அடிப்படையில், மும்பையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ சுபாஷ் பாசி மற்றும் அவரது மனைவி ரீனா பாசி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஹர்டோய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காஜிபூரில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சமாஜ்வாதி கட்சி சார்பில் சுபாஷ் பாசி எம்.எல்.ஏவாக பணியாற்றி வந்தார். அதன் பின்னர், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியில் இணைந்து, 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரிடம் சுபாஷ் பாசி தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.