இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
இந்தநிலையில், இன்று (29.07.2021) எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷி இருவரும், அவையில் சட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன்பிறகு மீண்டும் அவைகள் கூடியபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது மாநிலங்களவை கூடியுள்ளது. இதற்கிடையே காலையில் அவையை ஒத்திவைப்பதற்கு முன்பு பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "அவையின் சில உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் விதிகளை மீறும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். இது தொடர்ந்தால், அவையின் மாண்பைக் காக்கும் வகையில் அந்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.