இந்தியா முழுவதும் 17- வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசிக் கட்ட மக்களவை மே-19 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் ஆணையர்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை செய்து வருகிறார். மேலும் டெல்லியில் இருந்து தேர்தல் மேற்பார்வையாளர்கள் குழு அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் வாக்கு எண்ணிக்கை மே-23 ஆம் தேதி நடைப்பெற உள்ளதால் மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவர மே- 23 ஆம் தேதி அன்று மாலை அல்லது 24- ஆம் தேதி காலை ஆகலாம் என இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெய்ன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் முந்தைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு எந்திரங்களை மட்டும் சரிப்பார்த்தோம். ஆனால் தற்போது நான்கு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. ஒரு விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குகளின் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க சுமார் ஒரு மணி நேரம் ஆகும் என தெரிவித்தார். இதனால் இறுதி முடிவுகள் வெளிவர கால தாமதமாகும். வாக்கு பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரத்தில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் 28 எதிர்க்கட்சிகள் விவிபாட்-யில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் , வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்பிட்டு பார்க்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலில் எதிர்கட்சிகளின் கோரிக்கையால் மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக ஐந்து நாட்கள் ஆகும் என தெரிவித்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபாட் (VVPAT) உடன் வாக்குப்பதிவு எந்திரங்களை (EVMs) ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சுமார் 25000 விவிபாட் எந்திரத்தை சரிபார்க்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.