Published on 02/05/2020 | Edited on 02/05/2020
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் நேற்றுவரை மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பச்சை மண்டல பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு, தான் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் கர்நாடாகவில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில கலால் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சிவப்பு மண்டல பகுதிகளை தவிர மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் வரும் 4ம் தேதி முதல் திறக்கப்படும். ஆனால் மதுக்கடைகளில் பார்கள் திறக்கப்படாது. அனைவரும் மூன்று அடி சமூக இடைவெளி விட்டு மது வகைகளை வாங்கிச் செல்லலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.