ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மேவாட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் காவல்துறையினர் வாகனம் உட்பட பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்த வன்முறை சம்பவத்தால் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், உதவிக் காவல் கண்காணிப்பாளர் உஷா நூஹ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ‘பிட்டு பஜ்ரங்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியதால் தான் மற்றொரு சமூகத்தினர் இந்த ஊர்வலத்தை மறித்துள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான நூஹ் பகுதியில் நடந்த கலவரத்தில், பிட்டு பஜ்ரங்கி தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பசு பாதுகாவலர் பிட்டு பஜ்ரங்கி என்கிற ராஜ்குமார் என்பவரை நூஹ் காவல்துறையினர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 ஆயுதச் சட்ட விதிகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் பரிதாபாத்திற்கு கொண்டு சென்ற அவரை வன்முறை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒரு சமூகத்தினரை மிரட்டும் நோக்கில் வீடியோ வெளியிட்ட பிட்டு பஜ்ரங்கியின் கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பசு பாதுகாவலர் பிட்டு பஜ்ரங்கிக்கும், விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விஷ்வ இந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜ்ரங் தளத்தின் தொண்டர் எனக் கூறப்படும் பிட்டு பஜ்ரங்கி என்ற ராஜ்குமார், பஜ்ரங் தளத்துடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை. அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோவின் உள்ளடக்கம் பொருத்தமாக இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கருதவில்லை” என்று தெரிவித்துள்ளது.