மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
வருகிற 30ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி பாஜகவுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதீய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் நேரடியாக ஆளுநரை சந்தித்து கடிதத்தை வழங்கியுள்ளனர்.