மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் தங்களது நிலத்தைப் பலவந்தமாக கைப்பற்றியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்தப் பகுதியில் வாழும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ஷேக் ஷாஜகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர் ஷிபோ பிரசாத் ஹஸ்ராவின் வீட்டை அங்குள்ள உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டம் வலுத்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “மம்தா பானர்ஜி, இந்துக்களின் படுகொலைக்கு பெயர் பெற்றவர். திருமணமான இளம் இந்து பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய தனது ஆட்களை மம்தா பானர்ஜி அனுமதிக்கிறார்.
பெங்காலி இந்து பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேஷ்காலி பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்த மனிதர் யார்? ஷேக் ஷாஜகான் யார் என்று இப்போது வரை அனைவரும் யோசித்து வருகின்றனர். இப்போது, இந்த கேள்விக்கு மம்தா பானர்ஜி பதிலளிக்க வேண்டும்.” என்றார்.