Skip to main content

பேருந்துடன் ஆற்றில் தள்ளுவோம்; கேரளா முதல்வருக்கு வந்த கொலை மிரட்டல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Let's push the bus into the river; Kerala Chief Minister receives threat

 

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுடன் 140 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ‘நவகேரள சதஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கு பயணம் செய்வதற்காக பெங்களூரில் இருந்து ரூ.1.05 கோடி செலவில் ஒரு புதிய சொகுசு பேருந்து வாங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி, நேற்று (23-11-23) வயநாடு மாவட்டத்தில் நவகேரளா சதஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதனிடையே, நேற்று முன் தினம் (22-11-23) வயநாடு ஆட்சியர் அலுவலகத்திற்கு தபாலில் 2 கடிதங்கள் வந்தன. சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் பெயரில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், ‘பெரும் முதலாளிகளிடமும், மத தீவிரவாதிகளிடம் சரணடைந்த கேரளா அரசுக்கு, வயநாடு மாவட்டத்தில் நடக்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது தக்க பாடங்களை புகட்டுவோம். உண்மையான புரட்சி கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகளை துன்புறுத்தும் போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனை ரூ.1 கோடி பேருந்துடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம். 

 

வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி, கல்பெட்டா, பத்தேரி ஆகிய இடங்களில் நடைபெறும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சியை நாங்கள் தடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாவோயிஸ்டுகளின் இந்த மிரட்டல் கடிதம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் பங்கேற்கும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்