Skip to main content

நிலவு நாளைக் கொண்டாடிய ‘சந்திரயான்-3’; சவால் கட்டத்தை நோக்கி இஸ்ரோ

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

ISRO towards Chandrayaan-3- Challenge phase after celebrating Moon Day

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான் - 3 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது சந்திரயான்-3 நிலை குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

தொடர்ந்து சந்திரயான் - 3 தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வரும் சந்திரயான்-3இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும். அந்த இடத்தில் உந்துசக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்துவார்கள். அதற்கானப் பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

 

முதல், இரண்டு, மூன்று என விண்கலத்தின் உயரம் உயர்த்தும் நடவடிக்கை சிறு சிறு இடைவெளிகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நான்காவது உயரம் உயர்த்தும் நடவடிக்கை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் எனப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நிலவு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாளில் நான்காவது உயரம் உயர்த்தும் நடவடிக்கையையும் வெற்றிகரமாக முடிந்து நிலவின் அருகில் சந்திரயான்-3 சென்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து 5 ஆம் கட்ட உயரம் உயர்த்தும் பணி வரும் ஜூலை 25 ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து முக்கிய கட்டமாக 6வது கட்ட உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 6வது கட்ட உயரம்தான் நிலவின் ஈர்ப்பு விசைக்கு சந்திரயான்-3ஐ செலுத்தும் முக்கிய நிகழ்வாகவும் சவால் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்