பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (07.11.2021) டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், அவரது கொள்கைகளையும் பாராட்டி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அடுத்து நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலில், மக்களின் நம்பிக்கையை பாஜக வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, “பாஜக தொண்டர்கள், கட்சிக்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கை பாலமாக மாற வேண்டும். சேவை, உறுதிப்பாடு மற்றும் தியாகம் என்ற கட்சியினுடைய வழிகாட்டும் மதிப்புகளின் அடிப்படையில் மக்களுடன் உறவுகளை உருவாக்க வேண்டும். சேவை, தீர்மானம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக இயங்குகிறது. அது ஒரு குடும்பத்தைச் சுற்றி இயங்கவில்லை.
பாஜக வலுவாக வளர்கிறது என்றால் அது மோடியினால் அல்ல. அர்ப்பணிப்புள்ள தொண்டர்களின் உழைப்பால் அது வளர்கிறது. முழு பெரும்பான்மைகூடிய ஜனநாயக அரசாங்கத்தை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி. இதன்மூலம் இந்தியாவால் உள் மற்றும் வெளிப்புற பிரச்சனைகளை உறுதியுடன் கையாள முடிகிறது. மேலும் இதன்மூலம் இந்தியா உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
இந்திய தேசிய லோக்தளத்தின் கோட்டையாக விளங்கும் எலெனபாத்தில் கடந்த முறை 45,000 வாக்குகள் பெற்ற பாஜக, இந்தமுறை 59,000 வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த தொகுதியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் தாக்கத்தை மீறி வாக்குகள் அதிகரித்துள்ளது. இதற்கு அர்த்தம் பொதுமக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இல்லை என்பதே. நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பாஜக வெல்லும்” என நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.