வடமாநிலங்களில் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கேடா பகுதியில் நவராத்திரியை ஒட்டி 'கர்வா' நிகழ்ச்சி நடைபெற்ற போது சில நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இளைஞர்கள் சிலரை பிடித்த போலீசார் அவர்களை பொதுவெளியில் மக்கள் முன் நிறுத்தி லத்தியால் அடித்தனர். அந்த பகுதி மக்கள் அதனை கை தட்டி வரவேற்றனர். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த காட்சிகள் பலரின் கண்டனங்களை பெற்றது.
இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தசரா விழாவில் பொம்மை ட்ரம்பெட்களை வைத்து சத்தம் எழுப்பி, வருவோர் போவோரை சில இளைஞர்கள் இடையூறு செய்துள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பொம்மை ஹாரன் ட்ரம்பெட்களை அவர்கள் காதிலேயே ஊதியும், இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி காதில் ஊத வைத்தும் தண்டனை கொடுத்தனர்.