அண்மையில் திருப்பதி மலைப் பாதையில் பெற்றோருடன் யாத்திரை சென்ற 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தையடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ந்து வனத்துறை சார்பிலும் சிறுத்தையானது கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாகத் திருப்பதி மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நான்காவது முறையாகச் சிறுத்தை ஒன்றை வனத்துறை பிடித்துள்ளது.
திருப்பதி நடைபாதையின் ஏழாவது மைலில் நடைபாதையை ஒட்டிய பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்த நிலையில், நான்காவது முறையாகச் சிறுத்தை ஒன்று வனத்துறை கூண்டில் சிக்கியுள்ளது. ஏற்கனவே இதேபோல் திருப்பதி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், நான்காவதாக மீண்டும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.