கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தத்தம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது; பாஜக ஆட்சியைப் பிடித்தது.
பாஜக, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், பாஜகவிற்கு தாவி ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த 16 எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், தன்னைக் கட்சியில் இணைக்க பாஜக பேரம் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவியவரான ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல், தற்போதைய மந்திரி சபையில் இடம் கிடைக்காதது குறித்து பேசும்போது இதனைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "நான் பணம் வாங்காமல் கட்சியில் சேர்ந்தேன். கட்சியில் இணைய எனக்கு பணம் வழங்க முன்வந்தனர். நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். ஆனால் நான் பணம் கேட்கவில்லை அதற்குப் பதிலாக மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர் பதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "தற்போதைய அரசாங்கத்தில் எனக்கு ஏன் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த மந்திரி சபை விரிவாக்கத்தில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடனும் இதுகுறித்து பேசியுள்ளேன்" என கூறியுள்ளார்.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பாஜக பேரம் நடத்தியதாக கட்சியைச் சேர்ந்தவரே கூறியிருப்பது கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காங்கிரசில் இருந்து பாஜகவிற்குத் தாவிய ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலுக்கு எடியூரப்பா அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், எடியூரப்பா பதவி விலகலுக்குப் பிறகு அமைந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீலுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.