லேப்டாப் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சுமலதா (22). இவர் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை முடிந்து அவருடைய லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லேப்டாப் வெடித்துச் சிதறியது. இதில் சுமலதா மீது தீப்பொறிகள் பட்டது. இதனால் அலறியடித்துக்கொண்டு கத்தியுள்ளார் சுமலதா. சத்தம் கேட்டு அவரது பெற்றோர் அவரது அறைக்கு ஓடி வந்து பார்த்தபோது தீப்பிடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார் சுமலதா. இதனால் அதிர்ந்த சுமலதாவின் பெற்றோர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டு சுமலதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.