ஓஸ்லோ செல்வதால் லாலுவின் பேரணியில் ராகுல்காந்தி ஆப்செண்ட்!
லாலு பிரசாத் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து நடக்கவிருக்கும் பேரணியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராகுல்காந்தி, நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று ஓஸ்லோ செல்வதாகவும், அங்கு அரசியல் மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை லாலு பிரசாத் யாதவ் தலைமையில், பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜக அரசின் அராஜகங்களைக் கண்டித்து எதிர்க்கட்சிகளை இணைத்து நடத்தும் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்ள மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் தரப்பில் இருந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இந்தப்பேரணியில் கலந்துகொள்கிறார்.
எதிர்க்கட்சிகளுக்கான தொகுதிப்பிரிப்பு குறித்து முறையான கலந்தாலோசனை இல்லாமல் இந்தக் கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதில்லை என பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்