புதுச்சேரி மாநிலம் முழுவதும் அதாவது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் இன்று இரவு 10 மணி முதல் 26-ம் தேதி (திங்கள்) வரை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த ஊரடங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், பழம் மற்றும் காய்கறிக் கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடைகள், மருந்தகங்கள், செய்தித்தாள் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ், சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), விவசாயம் சார்ந்த பொருட்கள் போக்குவரத்து, வீட்டு விலங்குகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனைக் கடை, விவசாயம் சார்ந்த பணிகள், பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகம், ஏ.டி.எம், இன்டர்நெட் சர்வீஸ், கேபிள் சர்வீஸ், ஐ.டி, குடிநீர் விநியோகம், மின்விநியோகம், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு உணவு டெலிவரி ஆகியவை அனுமதிக்கப்படும் என்றும் மேலும் அரசுப் பணி உள்பட அத்தியாவசியப் பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் பயணிகள் டிக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, வரும் 26-ம் தேதி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் ஐந்து நாட்களும், கடைகள் பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இதனால் அத்தியாவசியத் தேவைக்குப் பாதிப்பு ஏற்படாது. ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், மதம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள், ஒன்றுகூடும் நிகழ்வுகள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மதம் சார்ந்த இடங்களில் வழக்கமான பூஜைகளை கரோனா விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.