உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்கு வழங்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் அந்த மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் மத்திய அரசின் இணை செயலாளர் லாவ் அகர்வால் அதனை மறுத்துள்ளார். இந்தியாவில் 3.28 கோடி அளவிலான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இருப்பு உள்ளதால் அதுகுறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.