உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறையைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மஹாராஷ்ட்ராவில் ஆளும் கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று (12.10.2021) லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இன்று இரங்கல் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் நடைபெறும் லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவிற்கு நேற்று இரவு முதலே மக்கள் வர தொடங்கினர். தற்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த விவசாயிகளுக்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில் ராகேஷ் திகைத் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஏற்கனவே இந்த இரங்கல் கூட்டத்தின்போது அரசியல்வாதிகளுக்கு மேடையில் இடம் அளிக்கப்படாது என விவசாய சங்கத் தலைவர்கள் கூறிய நிலையில், பிரியங்கா காந்தி மக்களுக்கு இடையே அமர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இதற்கிடையே லக்கிம்பூர் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான சேகர் பாரதி இன்று உத்தரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்காவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான குழு சந்திக்க காங்கிரஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்தநிலையில், குடியரசுத் தலைவரை சந்திக்க ராகுல் காந்தி தலைமையிலான குழுவுக்கு நாளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.