நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாடுமுழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைப்பணிகளுக்கு பற்றாக்குறை இருப்பதால் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா, "கேரள மாநிலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியார்மயமாக்க எங்கள் அரசு தயாராக இல்லை. இது நிதி ஆயோக்கின் கட்டாய உத்தரவு என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எப்படியிருந்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை. மேலும், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்களுக்கு ஏற்றவாறு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.