மதுரையிலிருந்து செல்லும் கேரளாவின் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை வழியாக கேரளாவின் கோட்டைவாசல் மற்றும் ஆரியங்காவு நகரம் வழியாகச் செல்கிறது. இயற்கையிலேயே கேரளா, மலை சார்ந்த வளம் கொண்ட அடர்ந்த காடுகளைக் கொண்டவைகள். நெடுஞ்சாலை செல்லும் ஆரியங்காவின் சாலையை ஒட்டி விவசாயியான குஞ்சுமோனின் வீடு உள்ளது. புது வீடு கட்டி அண்மையில்தான், அதில் தன் குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார் குஞ்சுமோன்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குஞ்சுமோனின் மூத்த மகனான விஜித் (43) வீட்டிலுள்ள அறை ஒன்றின் சோபாசெட்டில் அமர்ந்து வழக்கம் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது சமயம் ஏதோ கருமையான தன்மையுள்ள ஒன்று சோபாவினடியில் நெளிவதைக் கண்டவர் குனிந்து பார்த்து போது பெரிய பாம்பு ஒன்று சுடுண்டு போய் ஒண்டிக் கிடந்து கண்டு அலறியிருக்கிறார். அவரது அலறல் சப்தம் கேட்டுப் பதறியபடி வந்த பெற்றோர்கள் சோபாசெட்டை நகர்த்திய போது சீறிய பாம்பு, தலையைத் தூக்கியிருக்கிறது. பீதியும் அதிர்ச்சியும் தாங்காத பெற்றோர்கள் சப்தமிட அக்கம் பக்கத்து மக்கள் திரண்டு வந்து பாம்பை விரட்ட முயல, அந்தப் பாம்போ அவர்களை நோக்கிச் சீறிய போது பயத்திலும் மிரட்சியிலும் மக்கள் அலறியபடி சிதறி ஒடியிருக்கிறார்கள். பாம்பை விரட்ட வழிதெரியாத நிலையில் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்களும் அத்தனை நீளமுள்ள பாம்பை பிடிக்க முடியாமல் போயிருக்கிறது.
அதன் பின் வனத்துறையினர் திருவனந்தபுரத்திலிருக்கும் பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாபா சுரேஷை வரவழைத்திருக்கிறார்கள். இரவு 9 மணியளவில் வந்த பாபா சுரேஷ் மிகவும் சுலபமாக முழங்கால் அளவு கனம் கொண்ட நீண்ட நெடிய பாம்பினைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்ற விட்ட பிறகே பகுதி மக்களின் பயமும் பீதியும் அடங்கி ஆசுவாசப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்துப் பாம்பு பிடி பாபா சுரேஷ் கூறியதாவது; “இது கொடிய வகையும் கடும் விஷத் தன்மையும் கொண்ட ராஜநாகம். சுமார் எட்டரை அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் மிகச் சிறியது. இதன் பின்னே 12, 18 அடிகள் நீளம் வரை இந்த வகை பாம்புகள் உள்ளன. கடுமையான விஷத் தன்மை கொண்ட இந்த ராஜநாகம் ஒரே கடியில் பெரிய யானையை வீழ்த்தி சாகடித்துவிடும் பயங்கரம் உள்ளது. எனில், மனுஷங்க ரொம்ப சாதாரணம். இரவு இரை எடுத்த ராஜநாகம், வீடு காட்டை ஒட்டியிருப்பதால் நுழைந்து பதுங்கியிருக்கிறது. வீட்டில் பளிங்கு பதிக்கப்பட்டதால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியாமல் வழுக்குவதால் இத்தனை நேரம் பாம்பு ஒண்டியிருக்கிறது. நிஜத்தில் தரையில் சீறிப்பாயும் தன்மையுள்ளது” என்று அதிரவைத்தார். ராஜநாகத்தின் மிரட்டலால் பீதியும் அச்சமும் அப்பிப் போன மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரம் பிடித்திருக்கிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் தானே.