Skip to main content

"ஆட்டம் தொடரும்" -மம்தா பானர்ஜி சூளுரை!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

MAMATA BANERJEE

 

மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது நடத்திய போராட்டம் ஒன்றில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து மம்தா திரிணாமூல் கட்சியைத் தொடங்கினார். இருப்பினும் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நாளான ஜூலை 21 ஆம் தேதியை திரிணாமூல் காங்கிரஸ், தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது.

 

அந்தவகையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தியாகிகள் தினத்தைக் கொண்டாடியது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இன்று தேசிய அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த தியாகிகள் தினத்தில் மம்தாவின் உரை முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. தேசிய அரசியலில் நுழைவதால் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், திரிபுரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் மம்தா பேசுவது நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் தியாகிகள் தின உரையாற்றிய மம்தா, பாஜகவை மத்தியிலிருந்து அகற்றும் வரை அனைத்து மாநிலங்களிலும் 'கேலா ஹோப்' நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 'கேலா ஹோப்' என்பது நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பயன்படுத்திய வாசகமாகும். இதற்கு ஆட்டம் தொடரும் என்பது பொருள்.

 

இதுதொடர்பாக பேசிய மம்தா, "பாஜக இந்தியாவை இருளுக்குள் அழைத்துச் சென்று விட்டது. அதனை மத்தியில் இருந்து நீக்கும்வரை 'கேலா ஹோப்' தொடரும். பாஜகவை நாட்டிலிருந்து அகற்றும்வரை அனைத்து மாநிலங்களிலும் கேலா (ஆட்டம்) நடைபெறும். எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை நான் அறிவேன். எங்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் (எங்கள்) அனைவருக்கும் தெரியும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாருடனோ, பிற எதிர்க்கட்சித் தலைவர்களுடனோ அல்லது முதலமைச்சர்களுடனோ என்னால் பேச முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் மத்திய அரசால் கண்காணிக்கப்பட்டு உளவு பார்க்கப்படுகிறோம். ஆனால் எங்களைக் கண்காணிப்பது 2024 மக்களவைத் தேர்தலில் அவர்களைக் காப்பாற்றாது" எனக் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழுவை  நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாட்டைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள். அனைத்து தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுகிறது. உங்களால் தானாக முன்வந்து விசாரிக்க இயலாதா? இதுபற்றி விசாரிக்கக் குழுவை அமையுங்கள். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்" எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்