கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நியாயவிலைக்கடை பொருட்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் வகையில் சொமேட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,8 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,000 ஐ கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,17446 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், நியாயவிலைக்கடை பொருட்களை நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் வகையில் சொமேட்டோ நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முதல்கட்டமாக எர்ணாகுளம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஆன்லைன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை முன்பதிவு செய்தால், அந்த பொருட்கள் மக்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு இடையே மேலும் 17 இடங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமுடியாத சூழலில், அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதில் உள்ள சிரமத்தை இந்த திட்டம் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.