சபரிமலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து கொண்டே உள்ளது. அதற்கேற்றார் போல் பக்தர்களுக்கு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கேரள மாநில அரசும், தேவசம் போர்டும் செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (07.12.2019) அதிகாலையில் சன்னிதானம் பின்பக்கம் பெயிலிபாலம் பன்னிக்குழி அருகில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பில் நின்று கொண்டியிருந்தனர். அப்போது இருட்டில் பன்னிக்குழியை நோக்கி புலி ஓன்று பதுங்கி நடந்து வருவதை பார்த்த போலீசார் கையில் இருந்த டார்ச் லைட்டை புலியை நோக்கி அடித்தனர். ஆனால் புலி அந்த டார்ச் வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் முன்னே நோக்கி வந்து கொண்டியிருந்தது. இதனால் அலறியடித்து கொண்டு போலீசார் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த போலீசார் அரவணை பிளான்ட்டின் பின் பக்கம் பாதுகாப்பில் நின்று கொண்டியிருந்த சி.ஆா்.பி.எப் படை வீரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புலியை அங்கிருந்து துரத்தினார்கள். சபரிமலை சீசன் முடிந்ததும் பன்னிக்குழியில் உள்ள கழிவுகளை சாப்பிடுவதற்காக பன்றிகள் அங்கு வருவது வழக்கம். அந்த நேரத்தில் புலி பன்றிகளை வேட்டையாட வருவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் அந்த எல்லையை தாண்டி எந்த விலங்குகளும் உள்ளே வருவது இல்லை.
தற்போது இந்த ஆண்டு அந்த பகுதியில் சீசன் நேரத்திலும் புலி நடமாட்டம் இருப்பதால் பக்தா்கள் வனத்துறையினர் வகுத்துள்ள எல்லையை தாண்டி காட்டு பகுதியில் செல்லக்கூடாது என்று பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்லும் பக்தர்களிடம் எச்சரித்து உள்ளனர்.