இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
கேரள மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,65,922 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 91,873 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 24 பேர் கரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 768 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா கரோனா பரவல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வந்தாலும், இறப்பு விகிதம் 0.36 என்ற அளவில் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில மக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டினால் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.