Skip to main content

ஒரு மாணவிக்காக தனியாக ஒரு படகை ஏற்பாடு செய்த கேரள அரசு...

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

kerala officers arranged a boat for a student to write exam

 

மாணவி ஒருவர் தேர்வு எழுத தேர்வு மையத்திற்குச் செல்வதற்காகத் தனியாக படகு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது கேரள அரசு.
 


கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை திரும்ப இயங்க ஆரம்பித்துள்ள இந்தச் சூழலில், சில மாநிலங்களில் பள்ளி பொதுத்தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் கேரளாவில் 11-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. படகுப் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டிருப்பதால் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த மாணவிக்காகத் தனிப் படகு ஒன்றை இயக்கியுள்ளது கேரள அரசு.

கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சாண்ட்ரா பாபு. இவர் ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்புத் தேர்வை எழுத இருந்தார். ஆனால் இவரின் வீட்டில் இருந்து தேர்வு மையத்திற்கு படகின் மூலமே செல்லவேண்டும் என்ற நிலையில், படகுப் போக்குவரத்துக்கு இல்லாததால், தேர்வு எழுதமுடியாமல் போய்விடுமோ என்ற குழப்பத்தில் இருந்துள்ளார் சாண்ட்ரா. இதனையடுத்து, மாநில நீர்ப் போக்குவரத்து துறை (எஸ்.டபிள்யூ.டி.டி.) அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் சாண்ட்ரா. மாணவியின் நிலையை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக, படகு ஒன்றை எற்பாடு செய்து மாணவிக்காக இயக்கியுள்ளனர்.
 


70 பேர் அமரக்கூடிய அந்தப் படகில் மாணவி தனியாகப் பயணித்து தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுதி வந்துள்ளார். தேர்வு மையத்தில் மாணவியை விட்டுவிட்டு, அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை அங்கேயே காத்திருந்த படகு மீண்டும் மாலை 4 மணிக்கு அவரை வீட்டில் இறக்கிவிட்டுள்ளது. பொதுவாக இந்தப் பயணத்திற்குப் படகு வாடகையாக ரூ.4,000 வரை செலவாகும். ஆனாலும் சாண்ட்ராவிடம் படகு டிக்கெட் விலையான ரூ.18 மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளனர் படகை இயக்கியவர்கள். அதிகாரிகளின் இந்த உதவி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மாணவி, "நான் தேர்வு எழுத முடியாது என நினைத்தேன். ஆனால், அரசு என் நிலைமையை உணர்ந்து உதவி செய்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீர்வழிப் போக்குவரத்துத் துறையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்