கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசு எடுத்த நடவடிக்கை தான் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர் பினராய் விஜயன், சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தன் ஐயப்பன் பக்தர்களோடு இருக்கிறோம், அவர்களோடு துணை நிற்போம் என்று பாஜகவினர் பொய்யான தகவலை பரப்பினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வருவோம் என்று கூறிய பாஜக தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வர முடியாது என கூறுகிறார்கள்.
இது ஐயப்ப பக்தர்களை ஏமாற்றுவதாக தெரியவில்லையா? பாஜகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பி விட்டனர். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க முடியாததால் தான் தேர்தலில் தோற்றோம். சபரிமலை விவகாரத்தில் கேரளா அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவது தான் எங்களின் நிலைப்பாடு. அரசியல் அமைப்பின் சட்டப்படி தான் ஆட்சி செய்து வருகிறோம்.
தற்போதைய நிலையிலும் அரசியல் சட்டப்படி தான் செயல்பட முடியும். எங்கள் அரசு எப்போதும் ஐயப்ப பக்தர்களை ஏமாற்றியது இல்லை அவர்களுக்கு உதவிகளை தான் செய்தியிருக்கிறோம். எங்கள் கட்சியிலும், கூட்டணியிலும் மத நம்பிக்கை உள்ளவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்றார்.