இந்தியாவில் கரோனா அலை குறைந்துவந்தாலும், கேரளாவில் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாகவே பதிவாகிவருகிறது. அங்கு நேற்று (10.09.2021) மட்டும் 25,010 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், அண்மையில் கரோனா உறுதியாகும் சதவீதம் குறைந்ததால், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கையும் ஞாயிறு ஊரடங்கையும் இரத்து செய்த கேரள அரசு, தற்போது நகர்ப்புற மற்றும் பஞ்சாயத்து வார்டுகள் அளவில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
டபுள்யூ.ஐ.பி.ஆர் (WIPR) எனப்படும் வாராந்திர தொற்று மக்கள் தொகை விகிதம் எட்டுக்கும் அதிகமாக உள்ள நகர்ப்புற மற்றும் பஞ்சாயத்து வார்டுகளில் சிறப்பு தீவிர ஊரடங்கை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை கேரள அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
கேரள அரசின் பேரிடர் மேலாண்மை துறை, ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளை வாரந்தோறும் அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.