ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்குத் தடை விதிக்கவோ அல்லது சட்டம் இயற்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைக் கண்காணித்து, நெறிமுறைப்படுத்தவோ உத்தரவிடுமாறு கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "ஆன்லைன் சூதாட்டம் இப்போது மாநிலத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், இதன் முதன்மையான இலக்கு, நடுத்தர வருவாயிலிருந்து குறைந்த வருவாய்ப் பெரும் மக்கள்தான். மோசடி தளங்களில் விழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை சேமிப்பில் எஞ்சியிருப்பதைக் கூட சில சமயங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் 28 வயது இஸ்ரோ ஊழியர், ஆன்லைன் ரம்மி என்ற வலையில் விழுந்து, 21 லட்சம் கடனில் சிக்கிக்கொண்டார். கடனைத் திரும்பச் செலுத்த வழியில்லாததால், அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டுள்ள அந்த மனுவில், விராட் கோலி, தமன்னா, அஜு வர்கீஸ் போன்ற பிரபலங்கள், பொய்யான வாக்குறுதிகள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றனர். உண்மையில் இதுபோன்ற வெற்றிக்கான வாய்ப்பு யாருக்கும் கிடைப்பது மிகவும் சிறியது. இதன்மூலம் பொய்யான வாக்குறுதிகள், சந்தேகப்படாத மக்களை முட்டாளாக்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விராட் கோலி, தமன்னா, அஜு வர்கீஸ், கேரள அரசு ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.