ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்டு மனித சமூகத்தின் புருவங்களை உயர வைத்திருக்கிறது கேரள அதிசயக் கோழி.
கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப் புழா நகரில் வசிப்பவர் பிஜூகுமார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்துவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் கோழி வளர்ப்பு கடன் வாங்கியவர், அதன் மூலம் 20 நாட்டுக் கோழிகளை வாங்கி அதனை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அந்த நாட்டுக் கோழிகளில் புஷ்டியாகக் காணப்பட்ட கோழி ஒன்றிற்கு சின்னு என்று பெயரிட்டிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் சின்னு கோழி வழக்கம் போல் ஒரு முட்டை போட்டது. சற்று நேரம் கழித்து தொடர்ந்து முட்டை போடத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்து முட்டை போடுவதை அறிந்த அந்தப் பகுதியின் ஏராளமான மக்கள் அந்தக் கோழியைப் பார்க்க ஆவலாகத் திரண்டனர். அந்த மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சின்னு, வரிசையாக முட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தது. காலை 8.30 மணிக்கு முட்டை போடுவதைத் துவங்கிய அதிசய கோழியான சின்னு, மதியம் 2.30 மணிக்குப் பிறகே முட்டை போடுவதை நிறுத்தியது. ஆறு மணி நேரத்திற்குள்ளாக 24 முட்டைகளைப் போட்ட அதியக் கோழியைக் கண்டு கோழியின் உரிமையாளர் உட்பட அப்பகுதி மக்கள் பலர் வியந்தனர்.
இது குறித்து கால் நடை மருத்துவர்களிடம் கேட்டபோது, வழக்கமாக நாட்டுக் கோழி 8 முதல் 10 முட்டைகள் வரை போடும். ஆனால் கோழி 6 மணி நேரத்திற்குள் 24 முட்டைகள் போடுவது அதிசயமான நிகழ்வுதான். அந்தக் கோழியை உடல் ஆராய்ச்சி செய்த பிறகே அதன் தன்மை தெரிய வரும் என்கிறார்கள்.
ஆலப்புழாவில் அதிசயக் கோழி பேசுப் பொருளாகிவிட்டது.