சமீபத்தில், கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, கேரள ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி ஆளுநர் ஆரிஃப் கான் வந்த காரை முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் கான், காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். மேலும், கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “முதல்வர் நடத்தும் நிகழ்ச்சியில் இது போன்ற போராட்டங்களை அனுமதிப்பார்களா?. முதல்வரின் கார் அருகே யாராவது வர இயலுமா?. ஆனால், எனது கார் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் இருந்தனர்.
இது நிச்சயமாக முதல்வர் பினராயி விஜயனின் சதி. இதன் மூலம், என்னை உடல்ரீதியாக காயப்படுத்தச் சதி செய்ய அவர் ஆட்களை அனுப்பியுள்ளார். முதல்வருக்கும் எனக்கும் ஏதாவது விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், அவர் என்னை தாக்கச் சதி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. கேரள அரசின் அரசியலமைப்பு சீரழிந்து வருவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், துணைவேந்தரான ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்காக வேலை செய்ய வேண்டும். சங்பரிவார்களுக்காக அல்ல என்று கூறி அம்மாநிலத்தில் உள்ள அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அதே போல், ஆளுநர் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் பேனர் வைத்தனர். அதனை போலீசார் அகற்றினர். இந்நிலையில், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நேற்று பேனர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால், போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற பேனர் வைத்திருக்க முடியுமா?. அவர்கள் பல்கலைக்கழகத்தில் சலுகை பெற்ற பதவியை வகிக்கிறார்கள். அதனால் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை” என்று கூறினார்.