பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2019ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே இரவு பகலாக உழைத்து வருகிறது.
ஏழை எளிய மக்களுக்கு உதவிடவே மத்திய அரசு கடுமையாக உழைக்கிறது. இதனை முன்னிட்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழை, எளிய பெண்களின் தரத்தினை மேலும் உயர்த்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 75000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் வரலாற்று சிறப்பு பெறூம் வகையில், மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவிலேயே மின்சாரம் இல்லாத வீடே இல்லை எனும் நிலை உருவாக்கப்படும். இவையனைத்துக்கும் மேலாக பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.