வரும் மே 21- ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வைத் தள்ளி வைக்கக்கோரிய மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று (13/05/2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2021- ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவச் சேர்க்கை கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2022- ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால், கடந்த 2021- ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வே தற்போது தான் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவர்கள் அதிகளவில் தேவைப்படும் நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்றும், தற்போதே காலம் தாழ்ந்துவிட்டது, இதற்கு மேல் காலம் தாழ்த்தக்கூடாது எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வியாண்டை தற்போது தான் வரைமுறைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வைத் தள்ளி வைக்கக்கோரிய மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே அறிவித்தப்படி வரும் மே 21- ஆம் தேதி அன்று முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.