ஓணம் பண்டிகையின் போது மதியம் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து ஒண சாப்பாடு சாப்பிடுவது தான் அந்த பண்டிகையின் பிரதானம். இது அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக நடப்பதில் ஒன்று. இந்த நிலையில் ஒணம் பண்டிகை அன்று கொச்சி அருகே வைப்பின் தீவு நாயரம்பலம் பகுதியை சேர்ந்த மக்கள் காங்கிரசாருடன் சேர்ந்து, நெடுங்காடு சாலையில் அமர்ந்து மதிய ஒணம் விருந்து சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் வினோத் கூறும் போது, நெடுங்காடு, பனம்பள்ளி, நாயரம்பலம். ஹெர்பட் பாலம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களும் வர முடியாததால் மாணவ, மாணவிகள் பெரும் கஷ்டப்படுகின்றனர். அதேபோல் இந்த பகுதி சாலை ஒன்றின் பணிகளை முடிக்காமல் பாதியிலேயே கிடப்பில் போட்டு பல மாதங்கள் ஆகிறது.
இதை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் கடந்த 2-ம் தேதி பனம்பள்ளி சாலையில் பள்ளத்தில் சிறுமி ஒருவர் அத்தப்பூ கோலம் போடும் புகைப்படம் சழூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சாலையின் நிலையை குறித்து தலைமை செயலகத்தில் இருக்கும் முதல்வருக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு வேண்டி தான் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒணம் விருந்தை வீட்டில் இருந்து சாப்பிடுவதற்கு பதில் சாலையில் உட்கார்ந்து சாப்பிட்டு அரசுக்கு உணர்த்தினோம் என்றார். பொதுமக்கள் சாலையில் உட்கார்ந்து ஒணம் விருந்து சாப்பிட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.