வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிஹிலை எதிர்த்து மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. மேலும் கே.ஜிஎஃப் படத்தின் கதாநாயகன் யஷ் அவருக்கு ஆதரவு அளித்திருக்கிறார்.
--LINKS CODE------
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுமலதா நேற்று பேசுகையில், “பாஜகவின் ஆதரவால் எனக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள எதிர்தரப்பினர் எனக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தர்ஷன் வீட்டின் மீது நிகில் ஆதரவாளர்கள் கல்லெறிந்ததை ஏற்க முடியாது. இதேபோல நடிகர் யஷ்ஷை சிலர் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர். இத்தகைய மிரட்டலின் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது.
நான் யாரை சந்திக்கிறேன். என்ன வியூகம் வகுக்கிறேன் என்பதை உளவுத்துறை மூலம் கர்நாடக அரசு கண்காணிக்கிறது. எனது தொலைபேசியையும் அதிகாரிகள் ஒட்டுகேட்கிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே கொலை மிரட்டல் காரணமாக சுமலதா, தர்ஷன், யஷ் ஆகியோருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில பாஜக பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.