தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கபட்டதையடுத்து தமிழகத்தின் புதிய தலைவரை பாஜக மேலிடம் இன்று வரை நியமிக்கவில்லை. இதே போல் கேரளா பாஜக தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் கவா்னராக நியாமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக கேரளவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் ஆளும் கட்சிக்கு எதிராக நடந்த பல போராட்டங்கள் மற்றும் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டங்கள் எல்லாம் தலைவா் இல்லாமல் நடந்தன.
இதனால் கேரளா பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்கும் படி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் இன்று கேரளா பாஜக தலைவராக கோழிக்கோடை சோ்ந்த கே. சுரேந்திரன் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை தேசிய தலைவா் ஜே.பி நட்டா பிறப்பித்தார். புதிய தலைவராக நியாமிக்கபட்டுள்ள சுரேந்திரன் கேரளா பொதுச் செயலாளராக தொடா்ந்து 10 ஆண்டுகள் இருந்து வந்தார். மேலும் சபரிமலையில் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பையடுத்து கேரளா போலீசாரை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சுரேந்திரனை இருமுடி கட்டுடன் போலீசார் கைது செய்து 22 நாள் சிறையில் அடைத்தனர். கே. சுரேந்திரன் படிக்கும் போது ஏபிவிபி தலைவராகவும் அதன்பிறகு பாரதிய யுவமோர்ச்சா வயநாடு மாவட்ட தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.