இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்தும், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அளித்தும் உதவி வருகின்றன. இந்தநிலையில், இந்தியாவில் கரோனா தற்போது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதற்கு மோடி அரசே காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், மத்திய அரசு கரோனாவைக் கையாளும் விதத்தை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெருந்தொற்றைக் கையாளுவதற்கான, ஆளும் அரசின் மூன்று கொள்கைகள்:
1. எந்தவித தட்டுப்பாட்டையம் மறுக்க வேண்டும். தட்டுப்பாடு குறித்து பல ஊடக செய்திகள் வந்தால், அவற்றை இன்னும் தீவிரமாக மறுக்க வேண்டும்.
2. குறைவான மக்களை மட்டுமே பரிசோதித்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும்.
3. தகனம் செய்யும் இடங்களிலிருந்தும் சடலங்களைப் புதைக்கும் இடங்களிலிருந்தும் வரும் எண்ணிக்கையைப் புதைக்க வேண்டும். கரோனா இறப்புகளைக் குறைத்துக் காட்ட வேண்டும்" என கூறியுள்ளார்.