சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது பெருமழை. நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் இறுதிநிகழ்வு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக மாறியிருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர். இங்குள்ள கவலப்பாறா எனும் மலைக்கிராமத்தில் முத்தப்பன்குன்னு என்ற மலைச்சரிவுகளில் ஏராளமானோர் குடியிருந்து வந்தனர். அந்தக் குடியிருப்புகளிலேயே உச்சியில் விக்டர் மற்றும் தாமஸ் ஆகிய சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் சிறிய வீட்டில் வசித்து வந்தனர். இந்த ஐந்து குழந்தைகளுமே ஒரே படுக்கையில், ஒன்றாக கட்டிக்கொண்டு உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.
கடந்த வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, கடுமையான நிலச்சரிவால் அந்தப்பகுதி பாதிப்புக்குள்ளானது. இதில் விக்டர் – தாமஸின் வீடு மோசமாக தாக்கப்பட்டது. நிலைமையின் தீவிரமுணர்ந்து குழந்தைகளை மீட்கச் சென்றபோது, 2 மாத கைக்குழந்தை உட்பட மூவர் மீட்கப்பட்டனர். சிறுமிகளான அலீனா மற்றும் அனகா ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அலீனாவின் அழுகுரல் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது இரவு முழுவதும். மிகவும் ஆபத்தான சூழலில் மணிக்கணக்காக தோண்டித் தேடியும், குழந்தைகள் மீட்கப்படவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை காலை அனகாவை மீட்டபோது, அவளுக்கு உயிரிருப்பதாகவே எண்ணினார்கள். ஆனால், மேற்கொண்டு அவளைக் காப்பாற்றுவதற்கான எந்த வழியும் அங்கே அமையவில்லை. தொலைத்தொடர்பு, சாலை இணைப்புகள் என அனைத்துமே துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் மருத்துவமனை கொண்டுசென்றபோது அனகா உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்கள் மருத்துவர்கள்.
அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை, அலீனாவின் அழுகுரல் கேட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தீவிர தேடுதல் பணியில், அலீனா சடலமாக மீட்கப்பட்டாள். இந்த நிலச்சரிவில் இருந்து மட்டும் தற்போதுவரை இந்த சிறுமிகள் உட்பட 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 55 பேரின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எவ்வளவோ போராடியும் சிறுமிகளை காக்க முடியவில்லையே என்று அவர்களின் குடும்பத்தினர் கதறியழுதனர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அலீனா மற்றும் அனகாவின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு பூதானம் பகுதியிலுள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இருவரும் எப்போதுமே கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்குபவர்கள் என்பதால், தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்து, அவற்றை ஒரே குழியில் புதைத்தனர். இதை பார்த்து பலரும் கதறியழுத சம்பவம் நெஞ்சை உறையச் செய்திருக்கிறது.