லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும், இடுக்கி மாவட்டத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 28 வயது தாயும் 10 வயது மகனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். ஒரு குழந்தை தனது தொட்டிலிலேயே உயிரிழந்துள்ளது. அதே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று குழந்தைகளான அம்னா (7 வயது), அஃப்சன் (8 வயது) மற்றும் அகியான் (4 வயது) ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடியே உயிரிழந்துள்ளனர். இது மீட்புக்குழுவினரின் இதயத்தை உலுக்கியுள்ளது. தாய், மகன் மற்றும் மூன்று குழந்தைகள் கட்டியணைத்தபடி உயிரிழந்துள்ளதைப் பார்த்த அவர்கள், அது தாங்க முடியாத காட்சி என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு நபர்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது. உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோட்டயம், கொல்லம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால், தற்போது மழை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (18.10.2021) மாலை வரை கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேபோல் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆணையங்கள் களத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறியுள்ளார்.