நேற்று ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரம் குறித்து மக்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, 'ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் பிரதமர் மோடி அறையில் பதுங்கி இருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்திருக்கிறார், என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் மனோகர் பாரிக்கர் உரையாடல் தொடர்பான ஆடியோ குறித்தும் ராகுல் காந்தி பேசினார். தற்பொழுது ராகுல், ’ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்குத் திறந்த புத்தகத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன.
1.126 ரஃபேல் போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏன் 36 விமானங்களாகக் குறைக்கப்பட்டது?
2.ரஃபேல் போர் விமானம் ஒன்றில் விலை ரூ.560 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் பாஜக அரசு ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடியாக மாற்றப்பட்டது ஏன்?
4.இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்(எச்ஏஎல்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் பின்னர் ஏன் ஏஏ(அனில்அம்பானி) நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது
இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தனது மூன்றாவது கேள்வியை மட்டும் தனி பதிவு மூலம் பதிவு செய்துள்ள ராகுல், அதில் ‘மோடிஜி, தயவு செய்து கூறுங்கள், ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை ஏன் மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்துள்ளார். அதில் அப்படி என்ன இருக்கிறது? “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.