நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து உரிமையாளரைத் தாக்கி மிரட்டிய கொள்ளையர்கள், ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த மொத்த நகைகளையும் சுருட்டி ஓட்டம் பிடித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள அக்பர் பாக் பகுதியில் முகமது உக் ரஹ்மான் என்பவர் கிஸ்வா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
14-ஆம் தேதி நண்பகலில் முகத்தில் மாஸ்க், தலையில் ஹெல்மெட் அணிந்தபடி, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், வாடிக்கையாளர்களைப் போல் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கடைக்குள் நுழைந்தனர். அப்போது முகமது உக் ரகுமானின் மகன் கடையில் இருந்தார். கத்தியைக் காட்டி அவரை மிரட்டி, கடுமையாகத் தாக்கிய கொள்ளையர்கள், ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த 150 கிராம் எடையுள்ள மொத்த ஆபரணங்களையும் பெரிய பை ஒன்றில் அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் சென்றபின் கொள்ளைச் சம்பவம் குறித்து முகமது உக் ரஹ்மானின் மகன் தன்னுடைய தந்தைக்கு தகவல் அளித்தார்.
முகமத் உக் ரஹ்மான் தொலைபேசி மூலம் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, தப்பிச் சென்ற கொள்ளையர்கள் மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பகல் வேளையில் பலர் நடமாடும் பகுதியில் ஹைதராபாத்தில் இக்கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.