
இஸ்ரோ தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கஸ்தூரி ரங்கன் (வயது 84). இவர் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை என சுமார் 10 ஆண்டு கலாம் இஸ்ரோ தலைவராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகப் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25.04.2.2025) காலை 10.43 மணிக்கு காலமானார். இவரது மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் நாளை மறுநாள் (27.04.2025 - ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRI) வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கஸ்தூரி ரங்கன் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராகவும், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதையும் பெற்றவர் ஆவார். கஸ்தூரி ரங்கன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். கஸ்தூரிரங்கன் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற அறிவியலாளருமான முனைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேரளத்தில் பிறந்த தமிழரான முனைவர் கஸ்தூரி ரங்கன், இந்திய வின்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக பதவி வகித்த காலத்தில் தான் ஏராளமான செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்காக கஸ்தூரிரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன். அவரது மறைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.