தனது மகளின் திருமணத்தை பல கோடி செலவில், பாரம்பரிய முறைப்படி ஒன்பது நாட்கள் நடத்துவதாக கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ஆளும் பாஜக அமைச்சரவையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீராமுலுவின் மகளுக்கு ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் பாரம்பரிய முறைப்படி திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளன. 9 நாட்கள் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிகளுக்காக ரூ.500 கோடி செலவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்திற்கு ரூ.650 கோடி செலவிடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது அவரின் சகோதரரரும், பாஜக அமைச்சருமான ஸ்ரீராமுலுவின் மகள் திருமணத்திற்கு ரூ.500 கோடி செலவிடப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் புருவமுயர்த்த வைத்துள்ளது.