தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, "கருத்துக்கணிப்புகளை ஊடகங்களில் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. இந்தக் கருத்துக் கணிப்புகள் வாக்காளர்களைத் திசைத் திருப்பி, தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும். தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதற்கு கருத்துக் கணிப்புகள் நிறுத்தப்படுவது அவசியம். எனவே தேர்தல் கருத்துக்கணிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தலில் தாம் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதால்தான் அகிலேஷ் யாதவ் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வலியுறுத்துகிறார் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.