கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டதில் அமைந்துள்ள கல்குவாரிக்கு, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த லாரியும் வெடித்துச் சிதறியது.
இந்த வெடிவிபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அந்த வெடி பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்ட கல்குவாரியின் காண்ட்ராக்டர் ஆவார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விபத்திற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் "சிவமொக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைகிறேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயம்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு, தங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் வழங்கும்" என தெரிவித்துள்ளார்.