Skip to main content

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து என்னை நீக்குங்கள் - கேரள அரசுக்கு ஆளுநர் வேண்டுகோள்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

kerala governor - pinarayi vijayan

 

மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சில நியமனங்கள் தொடர்பான விவகாரங்களை குறிப்பிட்டு, பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

 

மேலும் கேரள ஆளுநர் அந்த கடிதத்தில், "பல்கலைக்கழகங்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதும், கல்வியாளர் அல்லாதவர்கள் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதும் தற்போதைய நிலையாக இருந்துவருகிறது. இந்தசூழ்நிலையில், பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, நீங்கள் தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும். அதன்மூலம் உங்கள் அரசியல் நோக்கங்களை ஆளுநரைச் சார்ந்திருக்காமல் நிறைவேற்றலாம் என்பதே உங்களுக்கு எனது ஆலோசனை. பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு, அரசியல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க வாய்ப்பில்லை" எனவும் கூறியிருந்தார். இந்த கடிதம் கேரள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் தற்போது கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தன்னை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்குமாறு கேரள அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுதொடர்பாக, "தீர்வு மிகவும் எளிதானது. அவர்கள் [அரசு] சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி முதலமைச்சரை (பல்கலைக்கழகங்களின்) வேந்தராக நியமிக்கலாம். இல்லையெனில், அரசு அதற்காக அவசரச் சட்டத்தை கொண்டு வரட்டும். நான் உடனடியாக அதில் கையெழுத்திடுவேன்.

 

நிச்சயமாக ஒரு விஷயம் நடந்தது. அது வேந்தராக இனி தொடரப்போவதில்லை என என்னை முடிவு செய்ய  வைத்தது. ஆனால் தேசிய நிறுவனங்களை உள்ளடக்கியது என்பதால் நான் அந்த விவகாரத்தை விவாதிக்க மாட்டேன். நீங்கள் பகலில் ஏதாவது ஒன்றை செய்வீர்கள், பிறகு வீட்டிற்குச் சென்ற பின் உங்கள் மனசாட்சி உங்களைத் துளைக்கும். தீவிரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. அரசியலமைப்பு உரிமையை மதிக்க வேண்டும். அதனால்தான் மிக மிக தீவிரமான அந்த பிரச்சனைகளை பகிரங்கமாக விவாதிக்க விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

  

சார்ந்த செய்திகள்