நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.